எல்லோருக்கும் வணக்கம்,
கோபம் நம்மை கொடூரமாக மாற்றும். கோபத்தை விட்டால் கொடிநன்மை கிடைக்கும். நமக்கு கோபம் வராமல் நாம் அமைதியான ஒரு ஆளாக, நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்போம். அனால் ஒரு சிலரோ நம்மை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். அப்படி வேடிக்கை பார்ப்பவர்கள் இவ்வுலகில் நிறைய உண்டு. உங்கள் வாழ்க்கையில் கூட கோபம் தாண்டவம் ஆடியிருக்கும். நீங்கள் கோபத்தில் தடால், புடால் என்று குதித்திருப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்களை பற்றி தெரியும். அவர்கள் உங்களை புரிந்து வைத்திருப்பார்கள். எனவே அவர்கள் உங்கள் கோபத்தை புரிந்ததனால் உங்களுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு வந்திருக்கும். ஆனால் நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி யோசித்திருக்கிறீர்களா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நீங்கள் எத்தனை முறை கோபப்பட்டாலும் உங்களை சகித்துக்கொள்ளும் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் அவர்களை கொஞ்சம் மனதில் நிறுத்தி யோசித்து பாருங்கள்.
அப்பா, அம்மா உங்களுக்கு நல்லது தான் செய்ய நினைப்பார்கள். நீங்கள் வேலைக்கு செல்லவில்லை என்றால் சோம்பேறித்தனம் அதிகமாகி விடும். உங்களுக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என்றால், பின்னால் உங்கள் அப்பா, அம்மா உங்களுக்கு திருமணம் முடித்துவைத்தால் அவர்களை வைத்து வாழ்வதற்கு பணம் தேவை. அந்த பணத்தை சம்பாதிக்க உங்களை வேலைக்கு செல் என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் நீங்கள் அதை தவறுதலாக புரிந்துகொண்ட அவர்கள் மீது கோபம் கொள்வீர்கள். அவர்கள் என்ன செய்வார்கள் எத்தனை காலம் தான் உங்களை வைத்து அவர்கள் சோறு போடமுடியும் இதை யோசிக்காமல் அவர்கள் மீது நீங்கள் கோபப்பட்டு, நான் இந்த வீட்டில் இருக்கமாட்டேன் எங்காவது போய் தொலைகிறேன் என்று கோபப்படுவீர்கள். நியாயப்படி கோபம் என்பது அவர்களுக்கு தான், உங்கள் மீது வர வேண்டும். ஆனால் மாறுதலாக நீங்கள் அவர்கள் மீது கோபப்படுவீர்கள்.
நீங்கள் உங்கள் சொந்தக்காலில், அதாவது உங்களை உங்களால் பார்த்துக்கொள்ள முடியும் என்ற அளவிற்காவது நீங்கள் உழைக்கவேண்டுமல்லவா? அந்த உழைப்பே உங்களை மற்றவர்களுக்காகவும் உழைக்க வைக்கும். உழைப்பு உயர்வு தரும் கேள்விபட்டுருப்பீர்கள். நீங்கள் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருந்தால் அது உங்களுக்கு பணத்தை மட்டுமில்லாமல் உங்களுக்கு மகிழ்ச்சியையும் தரும்.
கோபத்தை நீங்கள் வீட்டில் காட்டுவது போல் அலுவலகத்தில் காட்ட கூடாது. சக ஊழியர்கள், உங்களோடு பணிபுரிபவர்கள் உங்கள் கோபத்தை சகித்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களை விட அதிகம் கோபம் கொள்பவர்களாக கூட இருக்கலாம். அவர்களை நீங்கள் அனுசரித்தது தான் செல்ல வேண்டும். வேலை என்று வந்துவிட்டால் அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முழு கவனமும் அதில் இருந்தால், உங்கள் வேலை தானாக முடியும். உங்கள் அலுவகத்தில் நீங்கள் கோபப்பட்டால் உங்கள் வேலை இழக்க கூட நேரிடலாம். உங்கள் மேலாளர், உங்கள் சக ஊழியர், உங்களிடம் கோபப்பட்டால் கூட அவர்களை அனுசரித்து செல்ல உங்களை பழக்கி கொள்ளுங்கள். திறமையாக யோசித்தால், உங்களுடன் கோபம் கொள்பவர்களை உங்களுக்கு, உங்களால் நண்பனாக்க கூட முடியும். கோபத்தில் பல எதிரிகளை சம்பாதிக்கலாம். அனால் நீங்கள் அந்த கோபத்தை கட்டுப்படுத்தி பல நண்பர்களை சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள். பலரிடம் உங்களுக்கு கோபத்தின் மூலம் கூட அனுபவங்கள் கிடைக்கலாம்.
வீட்டில் எப்பொழுது நீங்கள் வருவீர்கள் என்று உங்கள் வயதான அம்மா அப்பா, மனைவி குழந்தைகள் உங்களுக்காக காத்திருப்பார்கள் என்று நியாபகத்தில் வைத்துக்கொண்டு, அலுவலகத்தை விட்டு கிளம்பும் பொழுது அவர்களை மனதில் வைத்துக்கொண்டு பூண்முகத்துடன் செல்லுங்கள். அலுவகலகத்தில் என்ன கோபம், சண்டை பிரச்சனை இருந்தாலும் அதை வீட்டின் வாசற்படியில் கழற்றிவைத்துவிட்டு வீட்டிற்குள் செல்லுங்கள். உங்கள் அம்மா, அப்பாவை வீட்டிற்கு வந்தவுடன் உணவு சாப்பீட்டீர்களா என்று கேளுங்கள் சந்தோச படுவார்கள்.
உங்கள் மனைவியிடம் நீங்கள் அன்பாக நடந்துகொள்ளுங்கள். உங்களுக்கு சாப்பாடு பரிமாறும் போது நீ சாப்பிட்டாயா என்று கேளுங்கள். உங்களுடன் சேர்ந்து அவர்களையும் உணவு சாப்பிட சொல்லுங்கள். என்ன கோபம் என்றாலும் அதை கொஞ்சம் ஓரம் வைத்து விட்டு உங்க குழந்தைகளை கொஞ்சுங்கள். அவர்களோடு விளையாடுங்கள்., உங்கள் கோபம் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தோடி விடும். முடிந்தால் உங்கள் மனைவி போல் நீங்களும் ஒரு அம்மாவாக குழந்தைகளுக்கு உணவு வாயில் ஊட்டி விடுங்கள். உங்கள் குழந்தை சிறுவயது அதாவது 5 வயதிற்குள் உள்ளது என்றால் அவர்களுக்கு உணவு, விளையாடிக்கொண்டே ஊட்டி விடுங்கள். அவர்கள் சந்தோசப்படுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் மனதில் உள்ள கோபம் மறைந்து மனம் முழுவதும் ஆனந்தத்தில் பொங்கும். இதை முயற்சி செய்து பாருங்கள்.
எப்பொழுதும் மனைவி எது செய்தாலும் இது நல்லாயில்ல, அது நல்லாயில்ல சொல்வதை விடுங்கள். எதற்கெடுத்தாலும் கோவப்படாதீர்கள் மனையிடம். மனைவி நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும் என்று தானே பார்த்து பார்த்து உணவை செய்கின்றார்கள். ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றை நினைத்து உதாரணமாக பண பிரச்சனை வைத்திக்கொள்வோம், இது தான் பொதுவான பிரச்சனை எல்லோருக்கும்.
இதை மனதில் வைத்து அதை எண்ணி எண்ணி மனதை சலனப்படுத்தி கொண்டு உங்கள் மனைவி மீது கோவம் கொள்வீர்கள். அவர்கள் ஏதோ ஒரு உணவு செய்து நீங்கள் சாப்பிட கொடுத்தால் சாம்பார் சரியில்லை, சட்னி சரியில்லை, என்ன தோசை இப்படி இருக்குறது, என்ன சோறு வேகவே இல்லை. இப்படி அப்படி என்று அவர்கள் மீது உங்கள் கோபத்தை காட்டி எரிந்து விழுவீர்கள். அப்படி கோபத்தை காட்டாதீர்கள்.
அவர்கள் மீது அதற்கு மாறாக அன்பை காட்டுங்கள். உங்கள் மனைவியிடம் நீ வைத்த சாம்பார் ரொம்ப நல்லாருக்கு, சட்னி ஆகா ஓகோ என்று சொல்லுங்கள் அவர்கள் மகிழ்ச்சியில் வெட்கப்படுவார்கள். உங்களையும் சந்தோசமாக வைத்திருப்பார்கள். சந்தோஷம் நம் வாழ்க்கையில் கடைசி வரை இருக்கவேண்டும் என்றால் கோபத்தை தூரமாக தூக்கி எறிந்துவிட்டு அன்பை பொழியுங்கள். சந்தோசமாக இருங்கள். எது நடந்தாலும் அது நம்முடைய நன்மைக்கு தான் நடக்கின்றது என்று கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு சந்தோசமாக இருங்கள்.
கோபம் என்ற முகமூடியை கழட்டிவிட்டு சந்தோசமாக வாழுங்கள்.... வாழ்க்கை வாழ்வதற்கே. வாழும் வரை சமாதானமாக, சந்தோசமாக வாழுங்கள்..


